அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் ஊர்வலம்


அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் ஊர்வலம்
x

ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதை கண்டித்து பெங்களூருவில் அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் ஊர்வலம் நடத்தினர். டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்பட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் ஆர்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்டு பண பரிமாற்ற வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். மத்திய பா.ஜனதா அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், அமலாக்கத்துறையை கண்டித்தும் நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் கர்நாடக காங்கிரஸ் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பெங்களூரு லால்பாக் பூங்கா அருகே அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, செயல் தலைவர்கள் ராமலிங்கரெட்டி, சலீம் அகமது, ஈஸ்வர் கன்ட்ரே, பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல், முன்னாள் மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, கே.ஜே.ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீசார் சேகரித்தனர்

அந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கெங்கல் ஹனுமந்தய்யா சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் வில்சன் கார்டன் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

ஊர்வலத்தில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை அரை நிர்வாணத்துடன் மத்திய அரசு இயக்குவது போன்ற காட்சிகளை காங்கிரசார் அரங்கேற்றினர். அவரை சாட்டையால் அடிப்பது போலவும் நடித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

காங்கிரசாரின் ஊர்வலத்தால் சாந்திநகர், லால்பாக்கை சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்தனர். இந்த நெரிசல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி வெளியே செல்ல முடியாமல் திணறின. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பெங்களூருவில் வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. அத்துடன் இவ்வாறு கட்சியினர் போராட்டம், ஊர்வலம் நடத்துவதால் நெரிசல் மேலும் அதிகரித்து வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இவற்றுக்கு அரசு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அரசுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story