காண்டிராக்டர் தற்கொலை வழக்கில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா குற்றமற்றவர்-கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல்


காண்டிராக்டர்  தற்கொலை வழக்கில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா குற்றமற்றவர்-கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல்
x

காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை வழக்கில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா குற்றமற்றவர் எனக்கூறி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

பெங்களூரு:

காண்டிராக்டர் தற்கொலை

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் பட்டீல். காண்டிராக்டரான இவர் கடந்த மாதம்(ஏப்ரல்) 12-ந் தேதி உடுப்பியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர், தனக்கு சேர வேண்டிய ஒப்பந்த பணிக்கான தொகையை விடுவிக்க, பஞ்சாயத்து துறை மந்திரியாக இருந்த ஈசுவரப்பா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு கூறினார். மேலும் தனது சாவுக்கு அவர் தான் காரணம் எனவும் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஈசுவரப்பாவும் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

குற்றமற்றவர்

இந்த நிலையில் காண்டிராக்டர் தற்கொலை வழக்கு குறித்து நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கையை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். அதில் காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை வழக்கில் ஈசுவரப்பா குற்றமற்றவர் என்றும், அவருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை

எனக்கூறி 'பி' அறிக்கையில் போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இதுபற்றி முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கூறியதாவது:- காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நான் ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போது நான் குற்றமற்றவன் என்று போலீசாரின் 'பி' அறிக்கையில் தெரியவந்துள்ளது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வாழ்த்து கூறினார். எனக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்குவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story