பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையில் 2 கிலோ மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா


பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையில்  2 கிலோ மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா
x

பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையில் 2 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு கண்காணிப்பு கேமராவை நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட உள்ளது.

பெங்களூரு:

2 கிலோ மீட்டருக்கு நவீன கேமரா

பெங்களூரு-மைசூரு இடையே 10 வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் சாலையாக அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலை தகவல் தொழில்நுட்பத்துடன் அமைவதும் தெரியவந்துள்ளது. அதாவது எக்ஸ்பிரஸ் சாலையில் ஒவ்வொரு 2 கிலோ மீட்டர் இடைவெளியிலும் ஒரு அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.

இதன்மூலம் எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து நடக்கிறதா? என்ன நடக்கிறது? என்பது அதிகாரிகள் இருந்த இடத்தில் இருந்தபடியே கண்டுகொள்ள முடியும். குறிப்பாக ஏதேனும் விபத்து நடந்தால், காயம் அடைந்தவர்கள் எந்த பகுதியில் உள்ளார்கள், அவர்களை எப்படி மீட்பது என்பதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். ஏதேனும் விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகன ஓட்டிகள் தப்பிக்க முயன்றாலும், அந்த வாகனத்தை எளிதில் அடையாளம் காணவும் முடியும்.

கிராமங்களுக்கு சர்வீஸ் சாலை

மேலும் விபத்து ஏற்பட்டால், வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விடுவதற்கும், இந்த கண்காணிப்பு கேமராகள் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் இருந்து மைசூரு செல்லும் வழியில் வசிக்கும் கிராமங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பிடதி, ராமநகர், சென்னபட்டணா, மத்தூர், மண்டியா, ஸ்ரீரங்கபட்டணாவில் எக்ஸ்பிரஸ் சாலைக்குள் வருவதற்கான நுழைவு பகுதியும், வெளியே செல்வதற்கான பகுதியும் அமைக்கப்படுகிறது.

இங்கு சர்வீஸ் சாலையும் அமைக்கப்படுகிறது. அந்த சா்வீஸ் சாலையை கிராம மக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். 118 கிலோ மீட்டர் தூரத்தில் அமையும் இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் பாதசாரிகள், சாலையை கடக்கும் விதமாக 18 பகுதிகளில் மேம்பாலமும் அமைக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் வந்து இறங்க...

அத்துடன் எக்ஸ்பிரஸ் சாலையில் செல்லும் முதல்-மந்திரி, மந்திரிகள், முக்கிய வி.ஐ.பி.க்களை வரவேற்பதற்காக, மாவட்ட எல்லை பகுதிகளில் வசதிகளும் செய்யப்படுகிறது. ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் யூ-டர்ன் செய்யும் வசதியும் இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் இருந்து 44 கிலோ மீட்டர் தொலைவிலும், மைசூருவில் இருந்து 74 கிலோ மீட்டர் தொலைவிலும் 12 ஏக்கர் நிலப்பரப்பில் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கான வசதிகள், டிரைவர்கள் ஓய்வெடுக்க தேவையான வசதிகள், உணவகங்களும் அமைய உள்ளது.

எக்ஸ்பிரஸ் சாலையாக இருந்தாலும் விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாகவும், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், வாகன ஓட்டிகள் தொடர்புகொள்ள 1033 இலவச தொலைபேசி எண் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் அதிகாரியான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


Next Story