பி.யூ.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவர்கள் தற்கொலை; குமாரசாமி அதிர்ச்சி


பி.யூ.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற  8 மாணவர்கள் தற்கொலை; குமாரசாமி அதிர்ச்சி
x

பி.யூ.சி. தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவர்கள் தற்கொலை சம்பவத்தால் குமாரசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் பி.யூ.சி. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதால் 8 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல. வெற்றி-தோல்வி என்பது சகஜமானது. வாழ்க்கையிலும் ஏற்ற-இறக்கங்கள் நிச்சயம் இருக்கின்றன. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அடுத்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற முயற்சி செய்ய வேண்டும்.

தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து மதிப்பெண் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்வது என்பது பெற்றோருக்கு இழைக்கும் அநீதி. கல்வியில் தேர்வுகள் இருப்பதை போல் வாழ்க்கையில் அக்னி பரீட்சைகள் இருக்கின்றன. அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூற வேண்டும்.

கல்வியில் பின்தங்கியவர்கள் நல்ல நிலைக்கு முன்னேற்றம் அடைந்தனர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதனால் மாணவர்கள் பயப்பட தேவை இல்லை. குழந்தைகளுக்கு பெற்றோர் தைரியமும், தன்னம்பிக்கையையும் ஊட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story