வேலை வாங்கி கொடுப்பதாக 7 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி;காண்டிராக்டர் உள்பட 2 பேர் கைது


வேலை வாங்கி கொடுப்பதாக 7 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி;காண்டிராக்டர் உள்பட 2 பேர் கைது
x

பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 7 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த காண்டிராக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பெங்களூரு:

குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் வேலை

பெங்களூரு சிக்கஜாலா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் முனிராஜ். இவரும் ரியல் எஸ்டேட் அதிபருமான நாராயணசாமி என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நாராயணசாமி, முனிராஜிடம் எனக்கு பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் காண்டிராக்டராக உள்ள பிரகாஷ் என்பவரை தெரியும். அவரிடம் கூறி உனது மகளுக்கு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய முனிராஜூம் தனக்கு மகளின் வேலைக்காக ரூ.30 லட்சம் கொடுத்து இருந்தார். மேலும் முனிராஜூன் உறவினர்கள் 6 பேரும் தங்களது பிள்ளைகளுக்கும் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி தரும்படி ரூ.1.20 கோடி கொடுத்து இருந்தனர். இதையடுத்து முனிராஜூன் மகள் உள்பட 7 பேரையும் பிரகாஷ், நாராயணசாமி ஆகியோர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அழைத்து சென்று சிலாிடம் அறிமுகம் செய்து வைத்து இருந்தனர்.

2 பேர் கைது

ஆனால் பணம் கட்டி நீண்ட நாட்கள் ஆனபோதிலும் 7 பேருக்கும் பணி நியமன ஆணை வரவில்லை. இதுகுறித்து கேட்ட போது பிரகாசும், நாராயணசாமியும் சரியாக பதில் சொல்லவில்லை. இந்த நிலையில் பிரகாஷ், நாராயணசாமி மீது சிக்கஜாலா போலீஸ் நிலையத்தில் முனிராஜ் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷ், நாராயணசாமியை கைது செய்தனர்.

விசாரணையில் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய காண்டிராக்டரான பிரகாஷ் தன்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி 7 பேரிடமும் ரூ.1½ கோடி மோசடி செய்தது தெரியவந்து உள்ளது. இதற்கு நாராயணசாமி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story