நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படுவது வதந்தி- பரமேஸ்வர் பேட்டி


நான் பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படுவது வதந்தி- பரமேஸ்வர் பேட்டி
x

தான் பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படும் தகவல்கள் வெறும் வதந்தி என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பதவிக்கு போட்டி

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க இப்போதில் இருந்தே தயாராகி வருகிறது. அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவிக்கும் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னாள் துணை முதல்-மந்திரியான பரமேஸ்வர், தலித் ஒருவர் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கூறி வருகிறார். மேலும் காங்கிரசில் இருந்து பரமேஸ்வர் ஓரங்கட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கூட்டு தலைமையில் சந்திக்கும்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கான முயற்சிகளை கட்சி தலைவர்கள் எடுத்து வருகிறோம். காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமாரும், எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையாவும் இருக்கிறார்கள். இவர்களில் யார் தலைமையில் காங்கிரஸ் சட்டசபை தேர்தலை சந்திக்கும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை காங்கிரஸ் கட்சி கூட்டு தலைமையில் சந்திக்கும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் ஓரங்கட்டப்படுவதாக நினைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் 8 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்துள்ளேன். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்துள்ளேன். நான் பா.ஜனதா கட்சியில் சேரப்போவதாக வரும் தகவல்களும் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி. அதுபற்றி எனக்கு வேறு எதுவும் தெரியாது.

முதல்-மந்திரி பதவிக்கு...

காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு மூத்த தலைவா்கள் உள்ளனர். அவர்கள் கட்சிக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அது இயல்பான ஒன்று தான்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதலில் ஆட்சிக்கு வர வேண்டும். அதுவே அனைத்து தலைவர்களின் நோக்கமாகும். முதல்-மந்திரி யார்? என்பதை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முடிவு செய்து நியமிப்பார்கள்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story