'ஐ.ஏ.எஸ். அதிகாரியை சிறைக்கு அனுப்ப இது தான் நேரம்'- கோர்ட்டில் நீதிபதி கருத்து


ஐ.ஏ.எஸ். அதிகாரியை சிறைக்கு அனுப்ப இது தான் நேரம்- கோர்ட்டில் நீதிபதி கருத்து
x

‘ஐ.ஏ.எஸ். அதிகாரியை சிறைக்கு அனுப்ப இது தான் நேரம்’ என்று கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் கூறினர்.

பெங்களூரு:

தனி நீதிபதி உத்தரவு

கர்நாடகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களை இணைப்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதி தனி நீதிபதி, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களை இணைப்பது தொடர்பான விதிமுறைகள் குறித்து 2 மாதங்களில் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து கர்நாடக உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த மே மாதம் 31-ந் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 6-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் நகர வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ்சிங் மற்றும் நகராட்சிகள் நிர்வாகத்துறை இயக்குனர் அர்ச்சனா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

15 நாட்கள் காலஅவகாசம்

இந்த நிலையில் இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ராகேஷ்சிங், அர்ச்சனா ஆகியோர் நேரில் ஆஜராயினர். அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் தியான் சின்னப்பா, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களை இணைப்பது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு கடந்த 3-ந் தேதி அரசாணையாக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்க 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். அப்போதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த விசாரணையின்போது, நீதிபதிகள் கருத்து கூறுகையில், 'கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக எடுத்து கொள்வது இல்லை. அதனால் தான் நேரில் ஆஜராகும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். கோர்ட்டு உத்தரவை எந்த நிலையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை சிறைக்கு அனுப்ப இது தான் நேரம். கோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் பின்பற்றாதது சரியான நடவடிக்கை அல்ல' என்றனர்.


Next Story