மந்திரி பதவிக்காக எம்.எல்.ஏ.விடம் ரூ.100 கோடி பேரம்- 4 பேர் கைது


மந்திரி பதவிக்காக எம்.எல்.ஏ.விடம் ரூ.100 கோடி பேரம்- 4 பேர் கைது
x

மும்பையில் மந்திரி பதவி வாங்கி தருவதாக கூறி எம்.எல்.ஏ.விடம் ரூ.100 கோடி பேரம் பேசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையில் மந்திரி பதவி வாங்கி தருவதாக கூறி எம்.எல்.ஏ.விடம் ரூ.100 கோடி பேரம் பேசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மந்திரி பதவி

புனே அருகே தவுண்ட் தொகுதியை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ராகுல் குல். இவரது செல்போனுக்கு கடந்த 12-ந்தேதி அழைப்பு ஒன்று வந்தது. இதனை அவர் ஏற்காததால் அவரது உதவியாளருக்கு அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் தன்னை ரியாஸ் சேக் (வயது41) என அறிமுகப்படுத்தி கொண்டார்.

மேலும் ராகுல் குல் எம்.எல்.ஏ.வை சந்திக்க டெல்லியில் இருந்து மும்பை வந்திருப்பதாக கூறிய நபர், அவருக்கு ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்தில் மந்திரி பதவி வாங்கி தர ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். இதையடுத்து ராகுல் குல் எம்.எல்.ஏ. நரிமண் பாயிண்ட்டில் உள்ள டிரைடென்ட் ஓட்டலுக்கு ரியாஸ் சேக்கை அழைத்து உள்ளார்.

ரூ.100 கோடி பேரம்

இந்த சந்திப்பின் போது அந்த நபர், மந்திரி பதவிக்காக ராகுல் குல்லிடம் ரூ.100 கோடி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ., அந்த நபரிடம் பாசங்கு செய்து பேரம் பேச தொடங்கினார். அப்போது ரூ.90 கோடி தந்தால் நிச்சயம் மந்திரி பதவி பெற்று தருவதாகவும், அதில் 20 சதவீத தொகையான ரூ.18 கோடியை முன்பணமாக தருமாறு தெரிவித்தார். அதன்படி பணம் தருவதாக கூறிய எம்.எல்.ஏ. பின்னர் மும்பை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

மேலும் ரியாஸ் சேக்கிடம் பணம் தருவதாக கூறி நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஓட்டலுக்கு வருமாறு அழைத்தார். ஓட்டலில் ராகுல் குல், மற்றொரு எம்.எல்.ஏ.வான ஜெய்குமார் கோருடன் ரியாஸ் சேக் வருகைக்காக காத்து இருந்தார்.

போலீசார் ரியாஸ் சேக்கை கையும், களவுமாக பிடிக்க ஓட்டலில் மாறுவேடத்தில் இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது ரியாஸ் சேக் ஓட்டலுக்கு வந்த போது போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

மேலும் 3 பேர் சிக்கினர்

விசாரணையின் போது மேலும் 3 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் நாக்பாடாவை சேர்ந்த ஜாபர் அகமது ரசீத் (53), தானேயை சேர்ந்த யோகேஷ் குல்கர்னி (57), சாகர் சங்வாய் (37) ஆகிய 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

இதில் ஜாபர் அகமது ரசீத் என்பவர் போலீசாரிடம், டெல்லியை சேர்ந்த ஒருவர் தங்களை தொடர்பு கொண்டு ரூ.50 முதல் ரூ.60 கோடி வாங்கி தந்தால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்க ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு மேல் வசூலிக்கும் பணத்தை தாங்களே பகிர்ந்து கொள்ளலாம் என உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டெல்லியை சேர்ந்த நபர் யார் எனவும், அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story