காஸ்மோஸ் வங்கி மோசடி வழக்கு 11 பேருக்கு சிறை தண்டனை

காஸ்மோஸ் வங்கி மோசடி வழக்கில் 11 பேருக்கு சிறை தண்டனை விதித்து புனே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புனே,
காஸ்மோஸ் வங்கி மோசடி வழக்கில் 11 பேருக்கு சிறை தண்டனை விதித்து புனே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வங்கி சர்வர் ஹேக்
இந்தியாவின் 2-வது பெரிய கூட்டுறவு வங்கியான காஸ்மோஸ் வங்கி புனேயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியின் சர்வர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 13-ந் தேதிகளில் இருமுறை ஹேக் செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.94 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டது. அதாவது ஹேக்கர்கள் 11-ந் தேதி காஸ்மோஸ் வங்கியின் விசா மற்றும் ரூபே கார்டு வாடிக்கையாளர்களின் தகவல்களை மால்வேர் மூலம் திருடியதுடன், வங்கி ஏ.டி.எம். சுவிட்ச் சர்வர் மூலமாக 28 நாடுகளில் உள்ள பல்வேறு ஏ.டி.எம்.களில் இருந்து ரூ.78 கோடியை எடுத்தனர். இதில் ரூ.2½ கோடியை இந்தியாவில் இருந்து எடுத்தனர்.
அதேபோல 13-ந் தேதி ஹேக்கர்கள் இதேபோல ஸ்விட்ச் சர்வர் முறையை பயன்படுத்தி ஹாங்காங்கை சேர்ந்த வங்கிக்கு ரூ.13 கோடியே 92 லட்சத்தை மாற்றினர். இதுகுறித்து வங்கி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெளிநாட்டு வங்கிக்கு மாற்றப்பட்ட ரூ13.92 கோடியில், ரூ.5.72 கோடியை மீட்டனர்.
11 பேர் குற்றவாளிகள்
மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சர்வரை முடக்கி பணத்தை கொள்ளை அடித்த 18 பேரை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு புனே மாவட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் 11 பேரின் மீதான குற்றம் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார். மேலும் குற்றவாளிகளில் 9 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும். மற்ற 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் வித்து உத்தரவிட்டார்.






