நாசிக் அருகே விபத்தில் ஆம்னி பஸ் தீப்பிடித்து 12 பேர் கருகி சாவு


நாசிக் அருகே விபத்தில் ஆம்னி பஸ் தீப்பிடித்து 12 பேர் கருகி சாவு
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் லாரி மீது மோதிய ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த கோர விபத்தில் 12 பேர் உடல் கருகி பலி ஆனார்கள். 43 பேர் காயம் அடைந்தனர்.

நாசிக்,

மராட்டியத்தில் லாரி மீது மோதிய ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த கோர விபத்தில் 12 பேர் உடல் கருகி பலி ஆனார்கள். 43 பேர் காயம் அடைந்தனர்.

தீப்பிடித்து எரிந்த பஸ்

யவத்மாலில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஆம்னி பஸ் ஒன்று மும்பை நோக்கி கிளம்பியது. பஸ்சில் 50-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். அதிகாலை 5.15 மணியளவில் பஸ் நாசிக் நந்துர் நாக்கா பகுதியில் நாசிக்- அவுரங்காபாத் ரோட்டில் மிர்ச்சி ஓட்டல் அருகில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ், நாசிக்கில் இருந்து புனே நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத வகையில் மோதியது. பின்னர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அந்த வழியாக வந்த மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தை அடுத்து பஸ் கண் இமைக்கும் நேரத்தில் தீப்பிடித்தது.

அதிகாலை நேரம் என்பதால் படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசு பஸ்சில் பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். விபத்து நடந்தவுடன் பஸ்சில் இருந்து அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

பலர் ஜன்னல் வழியாக குதித்தும், வாசல் வழியாகவும் வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். இதற்கிடையே தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் பஸ்சில் சிக்கியவர்கள் உதவிகேட்டு அபய குரல் எழுப்பினர்.

தீயில் கருகினர்

சத்தம்கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்களும் ஓடிவந்தனர். ஆனால் பஸ் கொழுந்துவிட்டு எரிந்ததால் வெளியில் இருந்தவர்களால் உள்ளே சிக்கியவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை.

இந்தநிலையில் தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் பஸ்சில் கருகிய நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து இருந்த பயணிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்தில் 12 பேர் பலியானதாகவும், 43 பேர் படுகாயமடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பார்வையிட்டார். மேலும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

விபத்து குறித்து ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டேன். காயமடைந்தவர்களையும் சந்தித்து பேசினேன். விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், இலவச சிகிச்சையும் அளிக்கப்படும்.

நாசிக்கில் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இதேபோல மாநிலம் முழுவதும் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அதை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்மட்ட கூட்டம் நடத்தப்படும்" என்றார்.

மோடி இரங்கல்

இந்தநிலையில் நாசிக் பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நாசிக்கில் நடந்த பஸ் விபத்து வேதனை அளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக பிராத்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்' என கூறியுள்ளார்.

1 More update

Next Story