சந்திராப்பூரில் ஒரு ஆண்டில் மட்டும் சட்டவிரோத மின் வேலிகளில் சிக்கி 13 பேர் பலி
சந்திராப்பூர் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் மட்டும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலிகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்
சந்திராப்பூர்,
சந்திராப்பூர் மாவட்டம் அடர்ந்த காடுகளை கொண்ட பகுதியாகும். இங்குள்ள விவசாய நிலங்கள் அடிக்கடி வன விலங்குகளின் நடமாட்டத்தால் சேதமடைகின்றன. இந்த சேதத்தை தவிர்க்க சில விவசாயிகள் சட்டவிரோதமாக எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் தங்கள் விளை நிலத்தை சுற்றி மின்வேலி அமைக்கின்றனர். இந்த மின் வேலிகள் பல நேரங்களில் மனித உயிர்களையே பறித்து விடுகின்றன. கடந்த 12 மாதங்களில் மட்டும் சந்திராப்பூர் மாவட்டத்தில் 13 பேர் இதுபோன்ற சட்டவிரோத மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- விவசாய நிலங்களை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலிகள் அமைக்கப்படுவதால் மக்கள் தேவையின்றி உயிரிழக்கின்றனர். விவசாய நில உரிமையாளர்களால் போடப்பட்ட இதுபோன்ற மின்வேலிகளில் சிக்கி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 13 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் மீது கொலைக்கு நிகரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மின்வேலி அமைக்கும் விவசாய நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.