போலீஸ்காரரை மோட்டார் சைக்கிளால் மோதிய 2 பேர் கைது

சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீஸ்காரரை மோட்டார் சைக்கிளால் மோதிய 2 பேர் போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
தாதர் நய்காவ் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக இருந்து வருபவர் அபிமன்யு(வயது43). இவர் கடந்த 4-ந்தேதி தசரா ஊர்வலத்திற்காக முல்லுண்ட் அருகே அமைக்கப்பட்டு இருந்த சோதனை சாவடியில் வாகன கண்காணிப்பு பணியில் இருந்தார்.
அப்போது சாக்கிநாக்கா கைரானி ரோடு பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி, ராம்விலாஸ் பஸ்வான் ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களை போலீசார் வழிமறித்து உரிம சான்றிதழ் காண்பிக்கும்படி தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் உரிமம் இல்லாததால் முகமது அன்சாரி திடீரென மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார். இதனை கண்ட போலீஸ்காரர் அபிமன்யு தடுக்க முயன்ற போது அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றனர். இந்த சம்பவத்தில் அவர் தலை, கைகளில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். இதனை கண்ட மற்ற போலீசார் விரட்டி சென்று தப்பிசென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர்.
காயமடைந்த போலீஸ்காரர் அபிமன்யுவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






