குஜராத் வியாபாரிடம் ரூ.1 கோடியே 18 லட்சம் வைரம் திருடிய 2 பேர் கைது

குஜராத் வியாபாரிடம் ரூ.1 கோடியே 18 லட்சம் வைரம் திருடிய 2 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
குஜராத் வியாபாரிடம் ரூ.1 கோடியே 18 லட்சம் வைரம் திருடிய 2 பேர் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.
வைரம் திருட்டு
மும்பையை சேர்ந்த 2 பேர் கடந்த பிப்ரவரி மாதம் வைரக்கற்களை வாங்குவதற்காக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியை சந்தித்தனர். அப்போது வியாபாரியிடம் உள்ள வைர கற்களை காட்டுமாறு தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரி விற்பனைக்காக வைத்திருந்த வைர கற்களை அவர்களிடம் காட்டி உள்ளார். அப்போது, அவர்களில் ஒருவர் தொடர்ந்து வியாபாரியிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தார். அப்போது அவர் அசந்த நேரம் பார்த்து அருகில் இருந்த மற்றொருவர் அங்கிருந்த உண்மையான வைர கற்களை திருடிவிட்டு, போலி வைர கற்களை வைத்துள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றதும், வியாபாரி வைர கற்களை சோதித்துள்ளார்.
அப்போது, போலி வைர கற்களை வைத்துவிட்டு உண்மையான கற்களை அவர்கள் திருடிசென்றது அவருக்கு தெரியவந்தது. திருட்டுபோன வைர கற்களின் மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சம் ஆகும்.
2 பேர் கைது
இதனால் பதறிப்போன வியாபாரி உடனடியாக குஜராத் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைர கற்களை திருடி சென்றவர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில் வைர கற்களை திருடிய இருவரும் மும்பையில் பதுங்கி இருப்பதாக குஜராத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக மும்பை விரைந்த குஜராத் போலீசார், மும்பை போலீசாரின் உதவியுடன் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் குஜராத் அழைத்து சென்றனர்.






