தாதர் மேம்பாலம் அருகே மரத்தின் மீது கார் மோதி 2 பேர் பலி

தாதர் மேம்பாலம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
தாதர் மேம்பாலம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் சிக்கிய கார்
மும்பையை சேர்ந்தவர் சுதர்சன். இவர் தனது காரில் நண்பர்களான சுனில் தத்வானி (வயது29), சதீஷ் யாதவ்(31), கேவின் தன்ராஜ் பிள்ளை(38), சாத் இக்பால் அன்சாரி(37) ஆகியோருடன் லோயர்பரேலில் உள்ள கேளிக்கை விடுதிக்கு கடந்த 9-ந்தேதி இரவு சென்றிருந்தார். பின்னர் மறுநாள் அதிகாலை 2 மணி அளவில் காரில் 5 பேரும் வீடு திரும்பினர். காரை சுதர்சன் ஓட்டி வந்தார். அப்போது தாதர் மேம்பாலம் அருகே வந்தபோது வேகத்தடை இருப்பதை சுதர்சன் கவனிக்கவில்லை. இதனால் வேகத்தடையில் வேகமாக ஏறிய கார் கட்டுப்பாட்டை இழந்து ஆகாயத்தில் பறந்து சாலை ஓரமாக இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
2 பேர் பலி
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வந்த போலீசார் படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுனில் தத்வானி, சதீஷ் யாதவ் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுதர்சன் மது போதையில் கார் ஓட்டி வந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






