தாராவி தமிழ் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது


தாராவி தமிழ் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
x

பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து தாராவி தமிழ் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து தாராவி தமிழ் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொது மக்கள் போராட்டம்

தாராவி காமராஜ் சால் பகுதியை சேர்ந்தவர் தமிழ் வாலிபர் விமல்ராஜ் (வயது25). கபடி வீரர். இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டருகே கிரிக்கெட் ஸ்டம்பால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாராவி போலீசார் முக்கிய குற்றவாளியான மல்லேஷ்(30) என்பவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் விமல்ராஜ் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக அவரது குடும்பத்தினர், நண்பர்கள் குற்றம்சாட்டினர். மேலும் அவர்கள் விமல்ராஜ் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று மதியம் தாராவி போலீஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் போலீஸ் துணை கமிஷனரும் தாராவி போலீஸ் நிலையம் வந்தார்.

தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.

இந்தநிலையில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. போலீஸ் நிலையம் வந்து வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என துணை போலீஸ் கமிஷனர், தாராவி சீனியர் இன்ஸ்பெக்டரிடம் வலியுறுத்தினார்.

இதேபோல தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை சேர்மன் காசிலிங்கம் நாடார், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்களும் வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் கொலை நடந்த போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து, கொலையில் தொடர்புடைய அனைவரையும் வழக்கில் சேர்க்க தாராவி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

2 பேர் கைது

இதையடுத்து தாராவி போலீசார் தமிழ் வாலிபர் விமல்ராஜ் கொலை வழக்கில் சாய், அபய், சன்னி ஆகிய 3 பேரை சேர்த்தனர். இதில் அபய், சாய் ஆகியோரை உடனடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சன்னியை தேடிவருகின்றனர். இதையடுத்து போலீஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.



Next Story