ஞானவாபியை போல புனேயில் கோவில் நிலத்தில் 2 மசூதிகள்- நிலத்தை மீட்க போவதாக நவநிர்மாண் சேனா அறிவிப்பு

ஞானவாபியை போல புனேயில் கோவில் நிலத்தில் 2 மசூதிகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அந்த நிலத்தை மீட்க போவதாகவும் நவநிர்மாண் சேனா அறிவித்து உள்ளது.
மும்பை,
ஞானவாபியை போல புனேயில் கோவில் நிலத்தில் 2 மசூதிகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அந்த நிலத்தை மீட்க போவதாகவும் நவநிர்மாண் சேனா அறிவித்து உள்ளது.
கோவில் நிலத்தில் மசூதிகள்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, கோவிலாக இருந்தது என சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த மசூதியை கள ஆய்வு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மாவட்ட கோர்ட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் மராட்டியத்தில் உள்ள புனே நகரில் கோவில் நிலத்தில் 2 மசூதிகள் கட்டப்பட்டு உள்ளதாக நவநிர்மாண் சேனா உரிமை கோரி உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் ஷிண்டே புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீட்க போராட்டம்
புனே நகரில் கோவில் நிலத்தில் 2 மசூதிகள் கட்டப்பட்டு உள்ளது. கில்ஜி வம்ச ஆட்சியாளரான அலாவுதீன் கில்ஜியின் கமாண்டர் ஒருவர் புனேஸ்வர் மற்றும் நாராயனேஸ்வர் கோவில்களை இடித்து விட்டு மசூதிகளை கட்டியுள்ளார். இந்த நிலத்தை மீட்கும் முகாமை நாங்கள் தொடங்கி உள்ளோம். இதற்காக ராஜ்தாக்கரே தலைமையிலான எங்களது கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
ஞானவாபி மசூதியை போல புனேஸ்வர் கோவில் நிலத்துக்காகவும் நாங்கள் போராட உள்ளோம். ராஜ்தாக்கரேயின் இந்துத்வா கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்து மராட்டிய அரசு விழிப்படைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






