பீட் அனல் மின் நிலையத்தில் வெடிவிபத்தை ஏற்படுத்திய 2 பேர் கைது- காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

பீட் மாவட்டத்தில் உள்ள பார்லியில் அனல் மின் நிலையத்தில் வெடிவிபத்தை ஏற்படுத்திய 2 பேர் கைது- காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
பீட்,
பீட் மாவட்டத்தில் உள்ள பார்லியில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் அனல் மின் நிலைய வளாகத்தில் உள்ள சாம்பல் விழும் பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் வெடிவிபத்து ஏற்பட்ட சமயத்தில் அங்கு ரோந்து பணியில் இருந்த அனல்மின் நிலைய பாதுகாப்பு மேற்பார்வையாளர், "வெடி சத்தம்கேட்டு அங்கு வந்ததாகவும், அப்போது அங்கு 2 பேர் நின்று இருந்ததாகவும்" போலீசாரிடம் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 பேரும் தினக்கூலி தொழிலாளர்கள் என்பதும், அவர்கள் தான் வெடி விபத்தை ஏற்படுத்தினர் என்பதும் தெரியவந்தது. மற்றொருவரின் அறிவுறுத்தலின் பேரில் வெடிவிபத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். எனவே போலீசார் தலைமறைவாக உள்ள 3-வது நபரை தேடிவருகின்றனர். மேலும் இவர்களிடம் இருந்து 103 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 150 டெட்னெட்டர்களை போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எதற்காக இவர்கள் அனல் மின் நிலையத்தில் வெடிவிபத்தை ஏற்படுத்தினர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






