கட்டிடம் இடிந்து இளம்பெண் உள்பட 2 பேர் பலி- 10 பேரின் கதி என்ன?

மும்பை அருகே பிவண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். இடிபாடுகளில் இருந்து குழந்தைகள் உள்பட 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 10 பேர் சிக்கி இருப்பதாக கருதப்படுகிறது.
மும்பை,
மும்பை அருகே பிவண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். இடிபாடுகளில் இருந்து குழந்தைகள் உள்பட 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 10 பேர் சிக்கி இருப்பதாக கருதப்படுகிறது.
3 மாடி கட்டிடம் இடிந்தது
தானே மாவட்டம் பிவண்டி வாலள்பாடா பகுதியில் உள்ள வர்தமன் காம்பவுண்டில் 3 மாடி வணிக கட்டிடம் இருந்தது. கட்டிடத்தில் சுமார் 4 குடும்பத்தினரும் வசித்து வந்தனர். மேலும் சிலர் கட்டிடத்தில் பணியாற்றி கொண்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1.45 மணியளவில் கட்டிடம் திடீரென இடிந்து தரைமட்டமானது.
சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் கட்டிடம் சீட்டு கட்டுபோல சரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். தகவல் அறிந்து பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், போலீசார் விரைந்து வந்தனர். ஆம்புலன்சுகளும் விரைந்தன.
2 பேர் பலி
மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். அவர்கள் 1 வயது, 2 வயது குழந்தைகள் உள்பட 12 பேரை உயிருடன் மீட்டனர். காயம் அடைந்து இருந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதேவேளையில் 26 வயது பெண் மற்றும் 40 வயது ஆண் ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இடிபாடுகளில் மேலும் 10 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த கட்டிட விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






