மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் இரும்பு ஏணி வைத்த சிறுவன் கைது + "||" + Arrested iron ladder arrested

தண்டவாளத்தில் இரும்பு ஏணி வைத்த சிறுவன் கைது

தண்டவாளத்தில் இரும்பு ஏணி வைத்த சிறுவன் கைது
கன்சோலி அருகே ரெயில் தண்டவாளத்தில் இரும்பு ஏணியை வைத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

கன்சோலி அருகே ரெயில் தண்டவாளத்தில் இரும்பு ஏணியை வைத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். மோட்டார் மேனின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

தானேயில் இருந்து பன்வெல் நோக்கி நேற்று முன்தினம் காலை 6.30 மணி அளவில் மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ரெயிலை மோட்டார் மேன் ராகுல் என்பவர் ஓட்டி வந்தார். ரெயில் ரபாலே– கன்சோலி இடையே வரும் போது தண்டவாளத்தில் இரும்பினால் ஆன ஏணி இருந்தது. இதை கவனித்த மோட்டார் மேன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ரெயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தினார். மோட்டார் மேனின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர் அவர் தண்டவாளத்தில் கிடந்த ஏணியை அப்புறப்படுத்தினார். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தண்டவாளத்தின் அருகே கிடந்த ஏணியை 3 சிறுவர்கள் தூக்கிச் செல்வதை கவனித்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில், ஒருவன் மட்டும் போலீசாரிடம் சிக்கினான். மற்ற 2 பேர் அங்கிருந்து தப்பிஓடி விட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட சிறுவன்(வயது12) கன்சோலி குடிசை பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. சிறுவன் அவனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் கிடந்த ஏணியை திருடி தண்டவாளம் வழியாக கொண்டு சென்ற சமயத்தில் மின்சார ரெயில் வந்ததால் அங்கேயே வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். மேலும் தப்பிச்சென்ற மற்ற சிறுவர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.