மாவட்ட செய்திகள்

27 சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு ஜெயில் + "||" + 27-year jail for Somalia pirates

27 சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு ஜெயில்

27 சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு ஜெயில்
27 சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை,

கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாய்லாந்து நாட்டிற்கு சொந்தமான வணிக கப்பலை சோமாலிய கொள்ளையர்கள் கடத்தினர். மேலும் அதில் இருந்த 24 தாய்லாந்து நாட்டு சிப்பந்திகளை பணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். கடத்தப்பட்ட கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் இருப்பதாக இந்திய கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தப்பட்ட வணிக கப்பலை இந்திய கடற்படையினர் திர், சமர் என்ற 2 கப்பல்களில் சென்று சுற்றி வளைத்தனர்.

பின்னர் தாய்லாந்து நாட்டினரின் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்து சோமாலிய கடற்கொள்ளையர்கள் 28 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அதில் இருந்த பணைய கைதிகளை பத்திரமாக மீட்டனர்.

இதன் பின்னர் கைது செய்யப்பட்ட கடற்கொள்ளையர்கள் மும்பை எல்லோ கேட் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில், மீதமுள்ள 27 கடற்கொள்ளையர்களுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட 3–வது தீர்ப்பு இதுவாகும். இதில், மொத்தம் 59 சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.