மாவட்ட செய்திகள்

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் சோதனையால் பரபரப்பு + "||" + Bomb threat to the Court Police searches

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் சோதனையால் பரபரப்பு

ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
போலீஸ் சோதனையால் பரபரப்பு
மும்பை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் கோர்ட்டில் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை, 

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 10 மணியளவில் ஒரு போன் அழைப்பு வந்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் அந்த அழைப்பை ஏற்று பேசினார்.

அப்போது, எதிர்முனையில் பேசிய ஆசாமி, மும்பை ஐகோர்ட்டின் 51-ம் எண் அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அந்த குண்டு சிறிது நேரத்தில் வெடித்து சிதறும். மேலும் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூரும் கொலை செய்யப்பட உள்ளார் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்

போலீஸ் சோதனை

இதைக்கேட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுபற்றி உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஐகோர்ட்டுக்கு விரைந்து வந்தனர். ஐகோர்ட்டில் இருந்த தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், ஊழியர்கள் என அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

பின்னர் அவர்கள் ஐகோர்ட்டு அறைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா? என மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு அங்குலம், அங்குலமாக சோதனை போட்டனர். மோப்ப நாயும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

புரளி

1 மணி நேரத்திற்கும் மேலாக போலீசாரின் இந்த சோதனை நீடித்தது. ஆயினும் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இறுதியில், வெடிகுண்டு இருப்பதாக மர்மஆசாமி கூறியது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதன் பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஐகோர்ட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை அடையாளம் கண்டுபிடித்து அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் மும்பை ஐகோர்ட்டில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.