மாவட்ட செய்திகள்

‘எதிர்ப்பாளர்களை கொலை செய்யும் போக்கு ஆபத்தானது’ ஐகோர்ட்டு கருத்து + "||" + trend of killing protesters is dangerous High Court Comment

‘எதிர்ப்பாளர்களை கொலை செய்யும் போக்கு ஆபத்தானது’ ஐகோர்ட்டு கருத்து

‘எதிர்ப்பாளர்களை கொலை செய்யும் போக்கு ஆபத்தானது’
ஐகோர்ட்டு கருத்து
“எதிர்ப்பாளர்களை கொலை செய்யும் போக்கு ஆபத்தானது” என்று மும்பை ஐகோர்ட்டு தெரிவித்தது.
மும்பை, 

புனேயை சேர்ந்த பகுத்தறிவாளரும், சமூக ஆர்வலருமான நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி மர்ம ஆசாமிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த இரு வழக்கிலும் கொலையாளிகளை பற்றி இன்னமும் துப்பு துலங்கவில்லை. ஆகையால், ஐகோர்ட்டு கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் என்று கூறி, நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரது குடும்ப உறுப்பினர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி மற்றும் பாரதி தாங்க்ரே ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

கவுரி லங்கேஷ் கொலை

அப்போது, சி.பி.ஐ. அதிகாரிகளும், குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். அதனை பரிசீலித்த நீதிபதிகள், “அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உறுதியான எந்தவொரு முடிவும் கிடைக்கவில்லை. உங்கள் (விசாரணை ஏஜென்சி) முயற்சி நேர்மையாக இருந்தாலும், முக்கிய குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதே உண்மை” என்றனர்.

மேலும், இந்த வழக்கு ஒவ்வொரு முறை ஒத்திவைக்கப்படும் போதும், மதிப்புமிக்க ஒரு உயிர் போய்க்கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதாவது பெங்களூருவில் கடந்த மாதம் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி, இந்த கருத்தை அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது:-

நாட்டுக்கு கெட்ட பெயர்

நாட்டில் தாராளவாத மதிப்புகளுக்கும், கருத்துகளுக்கும் மரியாதை இல்லை. பொதுமக்கள் தங்களது தாராளவாத கருத்துகளுக்காக தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஒரு சிந்தனையாளராக மட்டுமின்றி, தாராளவாத கொள்கையில் நம்பிக்கை வைத்திருக்கும் எந்தவொரு நபரும், அமைப்பும் குறி வைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு, எதிர்ப்பவர்களை கொலை செய்யும் போக்கு சமுதாயத்துக்கு மிகவும் ஆபத்தானது. இது சர்வதேச அளவில் நம் நாட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுக்கும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.