மும்பையில் 9 லட்சம் போலி வாக்காளர்கள்: சஞ்சய் நிருபம் குற்றச்சாட்டு


மும்பையில் 9 லட்சம் போலி வாக்காளர்கள்: சஞ்சய் நிருபம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Jan 2019 11:51 PM GMT (Updated: 17 Jan 2019 11:51 PM GMT)

மும்பையில் வாக்காளர் பட்டியலில் 9 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில தேர்தல் கமிஷன் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், மும்பையில் வாக்காளர் பட்டியலில், 9 லட்சம் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலில் திட்டமிட்டே போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தலா 1 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் வரை போலி வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது.

ஒரே நபருக்கு 13 வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல ஒரே தொகுதியில் பலருக்கு வெவ்வேறு பெயர், வயது, முகவரிகளில் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக உடனடியாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் அணுசக்தி நகர், மான்கூர்டு, சாந்திவிலி சட்டசபை தொகுதிகளில் 15 ஆயிரம் போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதேபோல 9 லட்சம் போலி வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story