மாவட்ட செய்திகள்

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் துயரம் நடைமேம்பாலம் இடிந்து 5 பயணிகள் பலி 29 பேர் படுகாயம் + "||" + Mumbai CSMD Railway station Walking HighBridge collapses 5 passengers killed 29 injured

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் துயரம் நடைமேம்பாலம் இடிந்து 5 பயணிகள் பலி 29 பேர் படுகாயம்

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் துயரம் நடைமேம்பாலம் இடிந்து 5 பயணிகள் பலி 29 பேர் படுகாயம்
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் பயணிகள் நடைமேம்பாலம் இடிந்து 5 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,

மத்திய ரெயில்வேயின் தலைமை அலுவலகமான மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் தென்மும்பையில் அமைந்து உள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்துக்கு தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக அங்குள்ள பி.டி.லேன் பகுதியையும், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தின் 1-ம் எண் பிளாட்பாரத்தின் வடக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் அங்குள்ள சாலையின் குறுக்கே பழமையான நடைமேம்பாலம் உள்ளது.

நேற்று இரவு 7.45 மணியளவில் இந்த நடைமேம்பாலத்தின் வழியாக ரெயில் நிலையத்தில் இருந்து பி.டி.லேன் நோக்கியும், அங்கிருந்து ரெயில் நிலையத்துக்கும் ஏராளமான பயணிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, பாரம் தாங்காமல் திடீரென அந்த நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது.

இதில், அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பயணிகள் இடிபாடுகளுடன் கீழே விழுந்தனர்.

இந்த கோர விபத்தில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தனர். உதவி கேட்டு அலறினார்கள்.

இதை பார்த்து ரெயில் நிலையத்தில் இருந்தவர்களும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்தனர். நடைமேம்பால இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். அப்போது, இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

படுகாயம் அடைந்து துடித்து கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்ட னர். அவர்கள் அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மற்றும் சயான் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பலியான 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது பெயர் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் காரணமாக சாவு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது.

29 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே நடைமேம்பாலம் இடிந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டனர். மேலும் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

விபத்து பற்றி அறிந்ததும் மாநில மந்திரி வினோத் தாவ்டே சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

5 பேரின் உயிரை பறித்த அந்த நடைமேம்பாலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. இந்த நடைமேம்பால விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

5 பேரின் உயிரை பறித்தது பயங்கரவாதி ‘கசாப்’ நடைமேம்பாலம்
மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் நேற்று 5 பேரின் உயிரை பறித்த நடைமேம்பாலத்துக்கும், 2008-ம் ஆண்டு மும்பைக்குள் கடல்மார்க்கமாக ஊடுருவி உலகையே நடுங்க செய்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் குருவியை சுட்டு தள்ளுவது போல் அப்பாவி பயணிகளை கொன்ற பயங்கரவாதி அஜ்மல் கசாப் இந்த நடைமேம்பாலத்தின் வழியாக தான் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினான். எனவே இந்த நடைமேம்பாலத்துக்கு ‘கசாப் நடைமேம்பாலம்' என்ற பெயரும் உண்டு. பிடிபட்ட பயங்கரவாதி கசாப் தூக்கில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உயிர் பலி வாங்கும் ரெயில்வே நடைமேம்பாலங்கள்
மும்பையில் கடந்த சில ஆண்டுகளாகவே ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலைய பகுதிகளில் இருக்கும் நடைமேம்பாலங்கள் உயிர் பலி வாங்கி வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழை பெய்து கொண்டிருந்த போது, எல்பின்ஸ்டன்ரோடு- பரேல் ரெயில் நிலையங்களை இணைக்கும் குறுகிய நடைமேம்பாலத்தில் அதிகளவில் பயணிகள் திரண்டனர். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

இந்த ஆண்டு மழைக்காலத்தின் போது, ரெயில் நிலையம் அருகே அந்தேரியின் கிழக்கு, மேற்கு பகுதியை இணைக்கும் வகையில் அமைந்துள்ள கோகலே ரெயில்வே மேம்பாலத்தின் நடைமேம்பால பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

சுமார் 80 லட்சம் பயணிகள் வந்து செல்லும் மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் உயிர் பலி வாங்கும் சம்பவங்கள் அரங்கேறி வருவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. #MumbaiCSTBridgeCollapse
2. மும்பையில் நடைமேம்பாலம் விழுந்தது “சத்தம்தான் கேட்டது, எதையும் பார்க்க முடியவில்லை,” நேரில் பார்த்தவர் பேட்டி
மும்பையில் நடைமேம்பாலம் விழுந்து விபத்துக்குள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
4. மும்பையில் 50 ஆயிரம் போலீசாருக்கு இனிப்பு பொட்டலம் - முகேஷ் அம்பானி அனுப்பினார்
மகன் திருமணத்தை முன்னிட்டு, மும்பையில் 50 ஆயிரம் போலீசாருக்கு இனிப்பு பொட்டலங்களை முகேஷ் அம்பானி அனுப்பினார்.
5. மும்பை எம்.எல்.ஏ. விடுதியில் ரூ.40 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
மும்பையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் ரூ.40 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.