அசோக் சவான் உள்பட முக்கிய தலைவர்கள் போட்டி மராட்டியத்தில் 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் 10 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு


அசோக் சவான் உள்பட முக்கிய தலைவர்கள் போட்டி மராட்டியத்தில் 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் 10 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 April 2019 11:30 PM GMT (Updated: 17 April 2019 10:28 PM GMT)

மராட்டியத்தில் 2-ம் கட்டமாக 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலை அசோக் சவான், சுஷில்குமார் ஷிண்டே உள்பட முக்கிய தலைவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

மும்பை, 

மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 4 கட்டமாக நடைபெற்று வருகிறது.

2-ம் கட்ட தேர்தல்

இதில் முதல்கட்டமாக வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளில் கடந்த 11-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இங்கு 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்தநிலையில் மராட்டியத்தில் 2-ம் கட்டமாக புல்தானா, அகோலா, அமராவதி, ஹிங்கோலி, நாந்தெட், பர்பானி, பீட், உஸ்மனாபாத், லாத்தூர், சோலாப்பூர் ஆகிய 10 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

179 வேட்பாளர்கள்

மேலும் 179 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறிப்பாக நாந்தெட் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், சோலாப்பூர் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி சுஷில் குமார் ஷிண்டே (காங்கிரஸ்), பீட் தொகுதியில் மந்திரி பங்கஜா முண்டேயின் சகோதரி பிரீத்தம் முண்டே (பா.ஜனதா) போட்டியிடுகின்றனர்.

அகோலா, சோலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் சட்டமேதை அம்பேத்கரின் ேபரன் பிரகாஷ் அம்பேத்கர் (பாரிப் பகுஜன் மகாசங்) போட்டியிடுகிறார்.

தேர்தலை முன்னிட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.

இன்று வாக்குப்பதிவு

10 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் தேர்தல் பணியாற்றும் ஊழியர்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் தேர்தல் அதிகாரிகள் நேற்று முழுவதும் ஈடுபட்டனர்.

தேர்தல் பணியாளர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் சென்றனர். நேற்று இரவுக்குள் அனைத்து ஊழியர்களும் வாக்குச்சாவடிக்கு சென்று சேர்ந்தனர். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.

இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் மாநில போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

Next Story