மாவட்ட செய்திகள்

மராட்டிய சட்டசபை தேர்தலில் 3,239 பேர் போட்டி; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு + "||" + 3,239 contestants in maharastra Assembly elections Release of final candidate list

மராட்டிய சட்டசபை தேர்தலில் 3,239 பேர் போட்டி; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மராட்டிய சட்டசபை தேர்தலில் 3,239 பேர் போட்டி; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 3,239 பேர் போட்டியிடுகின்றனர்.
மும்பை,

மராட்டியத்தில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக 288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி தேர்தல் நடக்கிறது.


இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன.

இதுதவிர ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி மற்றும் ஓவைசி தலைமையிலான எம்.ஐ.எம். கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளன.

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 27-ந் தேதி தொடங்கி 4-ந் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 5 ஆயிரத்து 543 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5-ந் தேதி நடந்தது.

அப்போது பிழை உள்ளிட்ட காரணங்களுக்காக 800 பேர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளான நேற்று முன்தினம் பலர் போட்டியில் இருந்து விலகி தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். மரத்வாடா மண்டலத்தில் மட்டும் 528 பேர் போட்டியில் இருந்து விலகினர்.

இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 3 ஆயிரத்து 239 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

குறைந்தபட்சமாக கொங்கன் மண்டலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் தொகுதியில் வெறும் 3 பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.

அங்கு தேசியவாத காங்கிரசின் சேகர் நிகம், சிவசேனாவின் சதானந்த் சவான், பகுஜன் சமாஜ் கட்சியின் சச்சின் மோகிதே ஆகியோர் களத்தில் உள்ளனர்.

அதிகபட்சமாக மராத்வாடா மண்டலத்தில் உள்ள நாந்தெட் தெற்கு தொகுதியில் 38 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் சிவசேனாவின் ராஜஸ்ரீ பாட்டீல், காங்கிரசின் மோகன் அம்பார்டே ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

இதுதவிர 34 தொகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். 18 தொகுதிகளை கொண்ட தானே மாவட்டத்தில் 213 வேட்பாளர்களும், நாசிக் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் 148 வேட்பாளர்களும், 21 தொகுதிகள் இருக்கும் புனே மாவட்டத்தில் 246 வேட்பாளர்களும் போட்டியில் இருக்கின்றனர்.

நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், புனே கோத்ருட் தொகுதியில் மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பீட் பார்லியில் மந்திரி பங்கஜா முண்டே, பல்லர்பூரில் மந்திரி சுதிர் முங்கண்டிவார், ஒர்லியில் சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, நாந்தெட் போகரில் முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான், சத்தாரா காரட் தெற்கில் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், பாராமதியில் முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.

கடந்த தேர்தலை போல அல்லாமல் இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் சீட் கிடைக்காத விரக்தியில் போட்டி வேட்பாளர்கள் பலர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள். கட்சி எச்சரிக்கையையும் மீறி அவர்கள் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற மறுத்து விட்டனர். இதன் காரணமாக போட்டி வேட்பாளர்களுடன் மராட்டிய சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து மராட்டியத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது.