மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 123 பேர் பலி புதிதாக 2,933 பேருக்கு தொற்று + "||" + To Corona in Maratham Another 123 killed 2,933 new infections

மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 123 பேர் பலி புதிதாக 2,933 பேருக்கு தொற்று

மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 123 பேர் பலி புதிதாக 2,933 பேருக்கு தொற்று
மராட்டியத்தில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 123 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இங்கு நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் மும்பையிலும் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் கூடி கொண்டே வருகிறது.


இந்தநிலையில் மராட்டியத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 933 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77 ஆயிரத்து 793 ஆக உயா்ந்து உள்ளது.

இதேபோல நேற்று மாநிலத்தில் புதிதாக 123 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். மாநிலத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். நேற்று முன்தினமும் 122 பேர் உயிரிழந்தநிலையில் அடுத்த நாளும் அதிகம் பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பலியான 123 பேரில் 48 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவர். இதுதவிர நவிமும்பையில் 6 பேரும், தானேயில் 8 பேரும், ராய்காட்டில் 3 பேரும், வசாய் விரார், பால்கர், பன்வெலில் தலா ஒருவரும், ஜல்காவில் 21 பேரும், நாசிக்கில் 3 பேரும், புனேயில் 9 பேரும், சோலாப்பூரில் 7 பேரும், கோலாப்பூரில் 2 பேரும், துலே, ஜல்னா, லாத்தூர், உஸ்மனாபாத், நாந்தெட், யவத்மாலில் தலா ஒருவரும், அவுரங்காபாத்தில் 5 பேரும், பர்பானியில் 2 பேரும், வாசிமில் 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை மராட்டியத்தில் 2 ஆயிரத்து 710 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர்.

மும்பையில் நேற்று ஒரே நாளில் 1,442 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்து 931 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல நகரில் பலியான 48 பேரில் 33 ஆண்கள், 15 பெண்கள் ஆவர். இதுவரை மும்பையில் 1,465 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர தானே மாநகராட்சியில் 4 ஆயிரத்து 414 பேரும் (87 போ் பலி), நவிமும்பை மாநகராட்சியில் 3 ஆயிரத்து 103 பேரும் (80 பேர் பலி), கல்யாண் டோம்பிவிலியில் 1,537 பேரும் (27 பேர் பலி), வசாய் விராரில் 1,059 பேரும் (32 பேர் பலி), புனே மாநகராட்சியில் 7ஆயிரத்து 700 பேரும் (351 பேர் பலி) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.