‘மாநில அரசுகளை கவிழ்ப்பதை கைவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள்’ மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்


‘மாநில அரசுகளை கவிழ்ப்பதை கைவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள்’ மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Oct 2020 12:51 AM GMT (Updated: 27 Oct 2020 12:51 AM GMT)

மாநில அரசுகளை கவிழ்ப்பதை விட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள் என மத்திய அரசை உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் தாதர், சிவாஜிபார்க் பகுதியில் உள்ள வீரசாவர்க்கர் அரங்கில் நடந்தது. கொரோனா பிரச்சினை காரணமாக சிவசேனாவின் ஆண்டு தசரா பொதுக்கூட்டம் வழக்கமாக நடைபெறும் சிவாஜி பார்க் மைதானத்தில் நடக்காமல், அரங்கத்தில் நடந்தது.

கூட்டத்தில் சிவசேனா தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளை செய்வதைவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்கும் வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த வேலைகளை செய்வதை கைவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள். நாம் கிளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.

நாடு பெருந்தொற்றை சந்தித்து இருக்கும் நேரத்தில், ஒருவரால் எப்படி அரசியலில் ஈடுபட முடிகிறது?. சிவசேனாவின் இந்துத்வா குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. மராட்டிய அரசு மற்றும் மும்பை போலீசாருக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுகின்றன.

எந்த பகுதியையும் மூடுவதிலும் எனக்கு மகிழ்ச்சி இல்லை. எச்சரிக்கையாகவும், பொறுமையாகவும் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். வாழ்வாதாரம் இன்றி மும்பைக்கு வந்தவர்கள் (கங்கனா ரணாவத்) அதற்கு துரோகம் செய்கின்றனர். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறுவது பிரதமர் மோடியின் தோல்வி ஆகும். அவர் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு வருவதாக கூறினார்.

மராட்டிய வெறுப்பாளர்கள் எல்லா வகையிலும் அதை களங்கப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். மராட்டிய மைந்தனை (ஆதித்ய தாக்கரே) தவறாக சித்தரித்து பீகாரை சேர்ந்தவரின் (சுஷாந்த் சிங்) நீதிக்காக அழுகின்றனர். தற்போது உள்ள ஜி.எஸ்.டி. முறையை மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்து உள்ளது. மாநில அரசுகள் பலன்பெறாவிட்டால் அதை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 
கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முடிந்தால் எனது ஆட்சியை கலைத்து பாருங்கள் என பா.ஜனதாவுக்கு சவால் விடுத்தார். மேலும் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கி பேசிய அவர், “முன்னால் மாற்று என்பது இல்லாமல் இருந்தது. தற்போது உங்களை தவிர வேறு யார் வேண்டுமானாலும் செய்ய முடியும் என மக்கள் சிந்திக்க தொடங்கி உள்ளனர்” என்றார்.

Next Story