தேசிய செய்திகள்

மோடியால் தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனார்; பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை + "||" + PM Modi Made Abdul Kalam President, Says Maharashtra BJP Chief

மோடியால் தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனார்; பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை

மோடியால் தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனார்; பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை
பிரதமர் மோடியால் தான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனார் என மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சா்ச்சை கருத்து
பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கடந்த வெள்ளிக்கிழமை புனேயில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி தான் அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கினார் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவா் பேசியதாவது:-

பா.ஜனதா தேசபக்தி உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல. ஸ்லிப்பர் செல்களாக வேலை பார்த்து வருபவர்களை தான் நாங்கள் எதிர்க்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி பல சாதாரண மக்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். அவர் தான் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை நாட்டின் குடியரசு தலைவராக ஆக்கினார். அப்துல் கலாமை மதத்தின் காரணமாக ஜனாதிபதி ஆக்கவில்லை. விஞ்ஞானியாக அவரின் அளப்பரிய பணிகளுக்காக தான் ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அப்துல் கலாம் ஜனாதிபதியான 2002-ம் ஆண்டு வாஜ்பாய் தான் நாட்டின் பிரதமராக இருந்தார். அப்போது மோடி குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தார். எனவே மோடி தான் அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்கினார் என பா.ஜனதா தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கண்டனம்
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ‘‘அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கியது வாஜ்பாயின் மிகப்பெரிய நடவடிக்கை. அந்த பெயரை பறிக்க முயற்சி செய்வது அபத்தமானது" என்றார்.

இதேபோல சந்திரகாந்த் பாட்டீலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ள காங்கிரஸ் கட்சி, “உண்மையான தேசபக்தரான அப்துல்கலாமை அவமதித்து சந்திரகாந்த் பாட்டீல் பாவம் செய்துவிட்டது. அப்துல் கலாம், வாஜ்பாயால் முன்மொழியப்பட்டு அனைத்து கட்சியினராலும் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர்” எனவும் காங்கிரஸ் தொிவித்து உள்ளது.