தேசிய செய்திகள்

நகைக்கடைக்குள் புகுந்து பயங்கரம்: உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை - 3 ஆசாமிகள் கைவரிசை + "||" + Jewellery shop looted in Dahisar owner shot dead

நகைக்கடைக்குள் புகுந்து பயங்கரம்: உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை - 3 ஆசாமிகள் கைவரிசை

நகைக்கடைக்குள் புகுந்து பயங்கரம்: உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகள் கொள்ளை - 3 ஆசாமிகள் கைவரிசை
மும்பையில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த 3 ஆசாமிகள் உரிமையாளரை சுட்டுக்கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
மும்பை,

மும்பை தகிசர் கிழக்கில் காவ்தே நகரின் ஓம்சாய்ராஜ் என்ற நகைக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் விகாஷ் பாண்டே (வயது 46). இவர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறந்து வைத்து இருந்தார். காலை 10.30 மணி அளவில் ஒரு ஸ்கூட்டரில் வந்து இறங்கிய 3 பேர் நகைக்கடைக்குள் புகுந்தனர். அதில் ஒருவன் கையில் துப்பாக்கி வைத்திருந்தான். திடீரென அந்த ஆசாமி கடை உரிமையாளர் விகாஷ் பாண்டேயை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். 

இதில் தலையில் தோட்டா பாய்ந்து படுகாயம் அடைந்த விகாஷ் பாண்டே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார். 

இதையடுத்து அந்த ஆசாமிகள் கடையில் இருந்த தங்க நகைகளை வாரி சுருட்டினர். அவற்றை 2 டிராவல் பைகளில் போட்டு மூட்டைக்கட்டி கொண்டு ஸ்கூட்டரில் தப்பி சென்றனர். பட்டப்பகலில் துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்களின் இந்த பயங்கர செயல் மும்பையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அள்ளிச்சென்ற நகைகளின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. மேலும் தப்பி செல்ல பயன்படுத்திய ஸ்கூட்டரின் நம்பர் பிளேட்டை மறைத்து வைத்து இருந்தனர். இதனால் கண்காணிப்பு கேமரா மூலம் வாகன நம்பரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஆனால் கொள்ளையர்கள் ஸ்கூட்டரில் தப்பி செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. அவர்கள் 3 பேரும் முக கவசம் அணிந்து இருந்தனர். மேலும் கொள்ளையர்கள் இளம் வயதினர் என்பது தெரியவந்தது. 

இந்த பயங்கர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.