தேசிய செய்திகள்

மராட்டியத்தில் விரைவில் கூடுதல் தளர்வுகள் - உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்துகிறார் + "||" + schools reopen in rural Maharashtra for students of Classes 8 to 12

மராட்டியத்தில் விரைவில் கூடுதல் தளர்வுகள் - உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்துகிறார்

மராட்டியத்தில் விரைவில் கூடுதல் தளர்வுகள் - உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்துகிறார்
மராட்டியத்தில் கொரோனா இல்லாத கிராமப்பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்கிடையே புதிய தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்த உள்ளார்.
மும்பை, 

அந்த காலக்கட்டத்தில் தினந்தோறும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மே மாதத்திற்கு பிறகு மாநிலத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இதில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக 6 முதல் 9 ஆயிரம் பேருக்கு வைரஸ் நோய் கண்டறியப்பட்டு வருகிறது.
 இந்தநிலையில் கடந்த வாரம், தொடர்ந்து ஒரு மாதத்திற்கு நோய் பாதிப்பு இல்லாத கிராமப்பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து இருந்தார். 

இந்தநிலையில் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், அதாவது கொரோனா இல்லாத கிராம பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் பள்ளிகளுக்கு குறைந்த அளவில் தான் மாணவர்கள் வந்து இருந்தனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு பெஞ்சில் 1 அல்லது 2 மாணவர்கள் மட்டுமே உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். 

அவுரங்காபாத் மாவட்டத்தில் நேற்று ஊரக பகுதிகளில் 488 பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை 64 ஆயிரத்து 282 பேர் படித்து வருகின்றனர். இதில் 18 ஆயிரத்து 509 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை தந்து இருந்தனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி பி.பி. சவான் கூறுகையில், "நகர பஞ்சாயத்து, நகரப்பகுதியில் பள்ளிகளை திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். ஊரகப்பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் இருப்பதால், நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்தது. எனவே இது வரவேற்க வேண்டி முடிவு தான்’’ என்றார். 

இதேபோல புனே ஊரகப்பகுதியில் நேற்று 87 பள்ளிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனர். 

இதற்கிடையே மாநில அரசு ஊரடங்கில் மேலும் புதிய தளர்வுகளை விரைவில் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநில கொரோனா தடுப்பு பணிக்குழுவுடன் அடுத்த சில நாட்களில் ஆலோசனை நடத்த உள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறுகையில், "கடைகள், ஓட்டல்கள் செயல்பட கூடுதல் தளர்வுகள் வழங்க அரசு சாதகமாக உள்ளது. இதுதொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். தளர்வுகள் வழங்குவது தொடர்பான விரிவான தகவல்கள் மந்திரி சபையில் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனை முதல்-மந்திரி அறிவிப்பார்" என்றார்.

மாநிலத்தில் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்குகிறது. அதையடுத்து நவராத்திரி, தீபாவளி பண்டிகை வர உள்ளது. தற்போது மும்பை உள்பட மாநிலம் முழுவம் மாலை 4 மணி வரை வார நாட்களில் மட்டுமே கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் நேரம், எல்லா நாட்களிலும் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். 
பண்டிகை காலம் நெருங்குவதால் கடைகளை கூடுதல் நேரம் திறக்க அரசு தளர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் மாநிலத்தில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் 3-வது அலை அபாயம் இருப்பதால், மும்பை பெருநகரில் மின்சார ரெயில்களில் பொது மக்களை அனுமதிக்க தற்போது வாய்ப்பு இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.