5 நாட்களில் போதைப்பொருள் வழக்கில் 206 பேர் கைது

மும்பை,
மும்பை போலீசார் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை முதல் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசார் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சந்தேகத்துக்கு இடமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையில் போலீசார் கடந்த 5 நாட்களில் போதைப்பொருள் தொடர்பாக 161 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் 206 பேரை கைது செய்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் போலீசார் போதைப்ஒழிப்பு நடவடிக்கையில் 48 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து எம்.டி, கஞ்சா, சரஸ், ஹெராயின் போன்ற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர். இதேபோல தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 ஆயிரத்து 276 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக 866 பான் கடைகளை அகற்றினர். போதை பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை தொடரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.






