12 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் பாதிப்பு


12 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)

பைப்லைன் பராமரிப்பு பணியால் மும்பை மாநகராட்சியின் 12 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட உள்ளது.

மும்பை,

பைப்லைன் பராமரிப்பு பணியால் மும்பை மாநகராட்சியின் 12 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட உள்ளது.

பராமரிப்பு பணி

மும்பை மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி வருகிற 30-ந் தேதி காலை 10 மணி முதல் 31-ந் தேதி காலை 10 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட 24 மணி நேரத்தில் மும்பை மாநகராட்சியின் 12 வார்டுகளில் குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்பட உள்ளது.

இதுபற்றி குடிநீர் பிரிவு மாநகராட்சி என்ஜினீயர் புருஷோத்தம் மால்வாடே கூறியதாவது:-

பாண்டுப் காம்ப்ளக்ஸ் பகுதியில் குடிநீர் கசிவு ஏற்பட்டதன் விளைவாக 4 ஆயிரம் எம்.எம். டையோமீட்டர் கொண்ட பைப்லைன் மற்றும் வால்வு பொருத்தும் பணி அன்றைய தினங்களில் நடைபெற உள்ளது. இதனால் கே கிழக்கு மற்றும் மேற்கு வார்டு பகுதிகளான வில்லேபார்லே, அந்தேரி, ஜோகேஸ்வரி, ஜூகு ஆகிய இடங்களில் 25 சதவீதம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.

25 சதவீதம் ரத்து

இதைத்தவிர பி தெற்கு, வடக்கு பகுதியான கோரேகாவ், ஆரேகாலனி, மலாடிலும், ஆர் தெற்கு, மத்திய, வடக்கு வார்டுகளான காந்திவிலி, சார்க்கோப், பொய்சர், கோராய், போரிவிலி, தகிசர், மந்தாபேஷ்வரிலும், எச் கிழக்கு, மேற்கு வார்டுகளான பாந்திரா, கார், சாந்தாகுருஸ் ஆகிய இடங்களிலும், எஸ், என், எல் ஆகிய வார்டுகளான விக்ரோலி, பாண்டுப், காட்கோபர், வித்யாவிகார், குர்லா, சுன்னாப்பட்டி போன்ற இடங்களிலும் 25 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது.

தாராவியிலும் பாதிப்பு

ஜி தெற்கு, வடக்கு வார்டுகளான மாகிம், தாதர் மேற்கு ஆகிய இடங்களில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது. முக்கியமாக தாராவியை பொறுத்தவரையில் பராமரிப்பு பணி நடைபெறும் தினத்தில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மறுநாளான 31-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரையில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story