புனேயில் லாரி மோதி 25 வாகனங்கள் நொறுங்கின- 20 பேர் காயம்


புனேயில் லாரி மோதி 25 வாகனங்கள் நொறுங்கின- 20 பேர் காயம்
x
தினத்தந்தி 21 Nov 2022 12:30 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் போது தறிகெட்டு ஓடிய தமிழக லாரி மோதி 25 வாகனங்கள் நொறுங்கின. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

புனே,

புனேயில் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் போது தறிகெட்டு ஓடிய தமிழக லாரி மோதி 25 வாகனங்கள் நொறுங்கின. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சரக்கு லாரி

புனேயில் உள்ள மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நவாலே மேம்பால பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த நேரத்தில் மும்பை நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

பாலத்தின் மேல் பகுதியில் இருந்து, கீழே இறங்கும்போது தறிகெட்டு ஓடிய அந்த லாரி முன்பகுதியில் நின்று கொண்டு இருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் சாலையில் நின்ற வாகனங்கள் நாலாப்புறமும் சிதறின. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த விபத்தில், லாரி ஒவ்வொரு வாகனமாக இடித்து தள்ளிக்கொண்டே சென்றது. மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் சிறிய கார்கள் பறந்து சென்று விழுந்தன. சில வாகனங்கள் அப்பளம் போல நொறுங்கின.

இதன் காரணமாக அந்த பகுதியே சில வினாடிகளில் போர்க்களம் போல மாறியது.

கிரேன் மூலம் அகற்றம்

லாரி மோதிய வாகனங்களில் இருந்தவர்கள் உதவி கேட்டு அலறினர். இந்தநிலையில் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய வாகனங்களில் இருந்த டீசல், பெட்ரோல் கொட்டி சாலையே எண்ணெய் குளமானது. முதல் கட்டமாக தீயணைப்பு துறையினர் சாலையில் கொட்டிய பெட்ரோல், டீசலை அகற்றினர். மேலும் கிரேன் மூலம் நொறுங்கி கிடந்த வாகனங்களை சாலையில் இருந்து அகற்றினர்.

இந்த விபத்து காரணமாக மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

20 பேர் காயம்

விபத்து தொடர்பாக போலீஸ் அதிகாாி ஒருவர் கூறியதாவது:-

நவாலே பாலத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடி ஏற்பட்ட விபத்தில் சுமார் 25 வாகனங்கள் சேதமடைந்தன. 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியது தமிழ்நாட்டை சேர்ந்த லாரி என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. சம்பவம் நடந்த உடன் லாரி டிரைவரான மணிராம் யாதவ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காரணம் என்ன?

இதற்கிடையே லாரி டிரைவர் டீசலை மிச்சம் பிடிக்க என்ஜினை அணைத்ததால் இந்த பயங்கர விபத்து நடந்திருக்க வேண்டும் என்பது தெரியவந்து உள்ளது.

இதுதொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் சுனில் பவார் கூறுகையில், "லாரி டிரைவர் பாலத்தில் இறங்கும் போது, என்ஜினை அணைத்து இருக்கலாம் என்று ஆர்.டி.ஓ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்து உள்ளது.

என்ஜினை அணைக்கும் போது, அது வாகனத்தின் பிரேக் பிடிக்கும் திறனை பாதிக்கும். எனவே பாலத்தில் இருந்து இறங்கும் போது லாரி நிற்காமல் வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதி உள்ளது" என்றார்.

ஏர் பலூன் விரிந்தது

விபத்தில் பாதிக்கப்பட்ட புனேயை சேர்ந்த வாடகை கார் டிரைவர் பாண்டுரங் பாசிங்கே கூறுகையில், "நான் கட்ரஜில் இருந்து மும்பைக்கு 4 பயணிகளை அழைத்து சென்று கொண்டு இருந்தேன். விபத்தில் எனது கார் முழுமையாக சேதமடைந்து விட்டது. ஏர் பலூன் விரிந்ததால் அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை" என்றார்.

விபத்து நடந்த இடத்தை தேசியவாத காங்கிரசை சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி. பார்வையிட்டார். பின்னர் அவர் புனேயில் விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியுடன் ஆலோசனை நடத்துவேன் என டுவிட்டரில் பதிவிட்டார்.

புனேயில் நடந்த இந்த பயங்கர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story