தீ விபத்தில் பலியான போலீஸ்காரரின் 2-வது மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தீ விபத்தில் பலியான போலீஸ்காரரின் 2-வது மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
தீ விபத்தில் பலியான போலீஸ்காரரின் 2-வது மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கருணை அடிப்படையில் வேலை
போலீஸ்காரரான முகமது யுனுஸ் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் உயிரிழந்தார். அவருடன் முதல் மனைவி ராய்சாவும் பலியானார். இதையடுத்து ராய்சாவின் 3 பிள்ளைகளுக்கு முகமது யுனுசின் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.), பணிக்கொடை போன்ற பணப்பலன்கள் வழங்கப்பட்டன.
அதே நேரத்தில் 2-வது மனைவி பிர்தஸ் கருணை அடிப்படையில் வேலை கேட்டு போலீஸ் துறையில் விண்ணப்பித்து இருந்தார். பிர்தசுக்கு 2 பிள்ளைகள். ஆனால் 2012-ம் ஆண்டு வரை பிர்தசின் மனுவுக்கு போலீஸ் துறை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே அவர் கருணை அடிப்படையில் வேலை கேட்டு மராட்டிய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.
இந்தநிலையில் முகமது யுனுசுக்கு 2-க்கும் அதிகமான பிள்ளைகள் (2 மனைவிகளின் பிள்ளைகளை சேர்த்து) இருப்பதால் கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது என 2020-ல் பிர்தசின் மனுவை தீர்ப்பாயம் நிராகரித்தது.
மாநில அரசுக்கு உத்தரவு
இதையடுத்து தற்போது 42 வயதாகும் பிர்தஸ் கருணை அடிப்படையில் வேலை கேட்டு மும்பை ஐகோர்ட்டில் முறையிட்டார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, "எந்த நிர்வாகமும் அதன் சொந்த ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினரை இரக்கமின்றி அணுகுவதை அனுமதிக்க முடியாது. பிர்தஸ் கடந்த 14 ஆண்டுகளாக வேலைக்கு வாய்ப்பு கேட்டு வருகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் உரிய அல்லது போதுமான காரணமின்றி அவருக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன. 28 வயது இருக்கும் போது அவர் கருணை அடிப்படையில் வேலை கேட்டு இருக்கிறார். அவரின் நீதிக்கான தேடல் இன்றோடு முடியும் என நம்புகிறோம்" என கூறி மராட்டிய நிர்வாக தீர்ப்பாயம் 2020-ல் அவருக்கு எதிராக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும் பிர்தசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க பரிசீலிக்குமாறு மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டனர்.
-----------






