மலாடு மார்வே பகுதியில் கழிமுகத்தில் குளித்த 3 சிறுவர்கள் மாயம் - ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

மும்பை மலாடு மார்வே பகுதியில் உள்ள கடல் கழிமுகத்தில் குளித்த 3 சிறுவர்கள் மாயமானார்கள். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மும்பை,
மும்பை மலாடு மார்வே பகுதியில் உள்ள கடல் கழிமுகத்தில் குளித்த 3 சிறுவர்கள் மாயமானார்கள். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
3 சிறுவர்கள் மாயம்
மும்பை மலாடு மார்வே கடற்கரையில் இருந்து சுமார் ½ கி.மீ. தூரத்தில் உள்ள கடல் கழிமுக பகுதிக்கு நேற்று காலை 9.30 மணியளவில் 12 முதல் 16 வயது வரை உள்ள 5 சிறுவர்கள் வந்தனர். அவர்கள் கழிமுகத்தில் இறங்கி ஆனந்தமாக குளித்து கொண்டு இருந்தனர். திடீரென அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால் சிறுவர்கள் 5 பேரும் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் மூழ்க தொடங்கினர். சிறுவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்து, அந்த பகுதியில் இருந்த சிலர் அவர்களை காப்பாற்ற கழிமுகத்தில் குதித்தனர். பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்த 13, 16 வயதான 2 சிறுவர்களை மீட்டனர். மற்ற 3 பேரும் தண்ணீரில் மூழ்கி மாயமானார்கள்.
தேடும் பணி தீவிரம்
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதேபோல கடற்படை, கடலோர காவல்படையும் உதவிக்கு அழைக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் படகு மூலமாகவும், கடற்படை, கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலமாகவும் கழிமுகத்தில் மூழ்கிய 3 சிறுவர்களையும் தேடிவருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடலில் மூழ்கிய சிறுவர்கள் சுபம் ஜெய்ஸ்வால்(வயது12), நிகில் காயம்குர்(13), அஜய் (12) என்பது தெரியவந்து உள்ளது. சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கிய சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் மார்வே கழிமுக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை ஜூகு கோலிவாடா பகுதியில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள். இந்தநிலையில் மார்வேயில் 3 சிறுவர்கள் கழிமுகத்தில் மூழ்கி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






