பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.3 கோடி இழப்பீடு- மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவு

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.3 கோடி இழப்பீடு வழங்குமாறு மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
விபத்தில் பலி
மும்பை காந்திவிலியை சேர்ந்தவர் பிரசாந்த். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி கோவாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது லாரி ஒன்று இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் ரூ.6 கோடி இழப்பீடு கேட்டு லாரி உரிமையாளர் மற்றும் காப்பீடு நிறுவனத்திடம் முறையிட்டனர்.
ரூ.3 கோடி இழப்பீடு
இதற்கு காப்பீடு நிறுவனம் லாரி டிரைவர் குடிபோதையில் இருந்ததால் இழப்பீடு வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனால் பிரசாந்தின் குடும்பத்தினர் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறிய வாதத்தை தீர்ப்பாயம் ஏற்க வில்லை. மேலும் லாரி டிரைவரின் தவறு காரணமாக தான் பிரசாந்த் உயிரிழந்தது நிரூபணமானது.
இதைத்தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய தீர்பாயம், உயிரிழந்த பிரசாந்த் மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வருமானம் பெற்று வந்ததால் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து வட்டியுடன் சேர்த்து லாரி உரிமையாளர் மற்றும் காப்பீடு நிறுவனம் இணைந்து ரூ.3 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.






