நாசிக் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 3 பேர் சாவு - 6 பேர் படுகாயம்

நாசிக் மாவட்டம் அரோலி பகுதியில் சாலையோரம் நின்ற லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
நாக்பூர்,
நாசிக் மாவட்டம் அரோலி பகுதியில் உள்ள ராம்டெக்- பண்டாரா சாலையில் நேற்று முன்தினம் மாலை லாரி ஒன்றை அதன் டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார். இருள் சூழ்ந்திருந்த பகுதியில் லாரியை நிறுத்தி இன்டிகேட்டர் எதையும் எரியவிடாமல் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று சாலை ஓரமாக நின்றிருந்த அந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. அந்த காரில் இருந்த 5 சிறுவர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர்களை அக்கம், பக்கத்தினரும், போலீசாரும் சேர்ந்து மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இருப்பினும் அங்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்ற 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த காரில் இருந்த அனைவரும் பாந்திராவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






