நாசிக்கில் ஏரியில் மூழ்கி 3 பேர் பலி

நாசிக்,
தானே பிவண்டியை சேர்ந்தவர் ரமீஸ் அப்துல்(வயது 36). இவர் தனது நண்பர்கள் நதீம் அப்துல்(34) மற்றும் ஷாநவாஸ் சேக் (41) ஆகியோருடன் நாசிக் மாவட்டம் இகத்புரியில் உள்ள பரிஷத் ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் 3 பேரும் ஏரியில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது ரமீஸ் அப்துல் மற்றும் நதீம் அப்துல் இருவரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தவித்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷாநவாஸ் சேக் அவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் 3 பேராலும் கரை திரும்ப முடியவில்லை. அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் தான் 3 பேரும் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.






