புனே எரவாடா ஜெயிலில் 3 விசாரணை கைதிகள் மர்மச்சாவு

புனே எரவாடா ஜெயிலில் 3 விசாரணை கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை கைதிகளை அடித்து கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மும்பை,
புனே எரவாடா ஜெயிலில் 3 விசாரணை கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை கைதிகளை அடித்து கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
3 கைதிகள் மரணம்
புனே எரவாடா ஜெயிலில் சந்தேஷ் கோந்தேகர், ஷாருக்சேக், ரங்கநாத் தாதல் ஆகியோர் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். ரங்கநாத் தாதலுக்கு கடந்த மாதம் 28-ந் தேதி உடல் நிலை மோசமானது. அவர் புனே சசூன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதேபோல கொடிய நோய் பாதிப்பால் அவதி அடைந்து வந்த சந்தேஷ் கோந்தேகர், ஷாருக்சேக் கடந்த 31-ந் தேதி சிகிச்சைக்காக சசூன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ரங்கநாத் தாதல், சந்தேஷ் கோந்தேகர் ஷாருக்சேக் 3 பேரும் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தனர்.
விசாரணை
விசாரணை கைதிகள் மரணம் குறித்து எரவாடா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அசோக் காதே கூறுகையில், "உயிரிழந்த விசாரணை கைதிகள் அனைவரும் சசூன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். ஒருவர் எய்ட்ஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்து உள்ளார். ஒருவர் கல்லீரல் பிரச்சினையாலும், மற்றொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
இதுதொடர்பாக விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்றார்.
குடும்பத்தினர் குற்றச்சாட்டு
எனினும் விசாரணை கைதிகளை போலீசார் ஜெயிலில் அடித்து கொலை செய்துவிட்டதாக அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். உயிரிழந்த கைதிகளின் குடும்பத்தினர் கடந்த திங்கட்கிழமை ஏரவாடா ஜெயில் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைதிகளின் குடும்பத்தினர் குற்றச்சாட்டை போலீசார் மறுத்து உள்ளனர்.






