உத்தர பிரதேசத்தில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேர் காஷிமிராவில் சிக்கினர்
உத்தர பிரதேசத்தில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் காஷிமிராவில் கைது செய்தனர்
வசாய்,
உத்தரபிரதேச மாநிலம் மெகர்நகர் போலீஸ் எல்கைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் துல்ரே யாதவ். கடந்த 2019-ம் ஆண்டு ராம்விலாஸ் (வயது55), தினேஷ் (18), அனில் யாதவ் (20), கமலேஷ் யாதவ் (28) ஆகிய 4 பேர் சேர்ந்து துல்ரே யாதவை கொலை செய்தனர். இது குறித்து மெகர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். 4 பேரும் தலைமறைவாகி விட்டதால் அசாம்காட் கோர்ட்டு அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள 4 பேர் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் தலைமறைவான 4 பேர் தானே மாவட்டம் காஷிமிரா பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் உத்தரபிரதேச மாநில சிறப்பு படை போலீசார் இங்கு வந்து மிராபயந்தர்-வசாய்விரார் போலீசாருடன் இணைந்து அவர்களை தேடி வந்தனர். அங்கு பதுங்கி இருந்த 3 பேர் போலீசில் நேற்று சிக்கினர். கமலேஷ் தலைமறைவாகி விட்டார். கைதான 3 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக உத்தரபிரதேசத்திற்கு அழைத்து சென்றனர்.