தாராவியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் 4 பேர் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்தனர்; வர்ஷா கெய்க்வாட்டுக்கு பின்னடைவு

தாராவியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் 4 பேர் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்தது, வர்ஷா கெய்க்வாட்டுக்கு பின்னடைவாக அமைந்து உள்ளது.
மும்பை,
தாராவியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் 4 பேர் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்தது, வர்ஷா கெய்க்வாட்டுக்கு பின்னடைவாக அமைந்து உள்ளது.
ஷிண்டே கட்சியில் இணைந்தனர்
மும்பை மாநகராட்சி ஆட்சி காலம் முடிந்து ஒரு ஆண்டை தாண்டிவிட்டது. மாநகராட்சி மாநில அரசின் சிறப்பு அதிகாரி மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு மழைக்காலம் முடிந்த பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மாநகராட்சியை பொருத்தவரை பா.ஜனதா, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவில் அதிக முன்னாள் கவுன்சிலர்கள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு ஆதரவாக குறைந்த எண்ணிக்கையில் முன்னாள் கவுன்சிலர்கள் உள்ளனர். தங்கள் பலத்தை அதிகரிக்க உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சி கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாற்று கட்சி முன்னாள் கவுன்சிலர்கள் 8 பேர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தனர். கட்சி தாவியவர்களில் 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். ஒருவர் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவையும், மற்றொருவர் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
4 தாராவி கவுன்சிலர்கள்
இதேபோல ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த 6 முன்னாள் கவுன்சிலர்களில் 4 பேர் தாராவியை சேர்ந்த குணால் மானே, கங்கா மானே, பப்பு கான், பாஸ்கர் ஷெட்டி ஆவர். மும்பையில் 'இந்தியா' கூட்டணி கூட்டத்துக்கான ஏற்பாடுகளில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர்கள் கட்சி தாவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல சமீபத்தில் மும்பை காங்கிரஸ் தலைவராக தாராவி எம்.எல்.ஏ. வர்ஷா கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். அவர் மும்பை காங்கிரஸ் தலைவராக இருக்கும்போது, அவரது தொகுதியில் இருந்தே 4 முன்னாள் கவுன்சிலர்கள் கட்சி மாறியிருப்பது வர்ஷா கெய்க்வாட்டுக்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதுதவிர வர்ஷா கெய்க்வாட்டின் தந்தையும், முன்னாள் எம்.பி.யுமான ஏக்நாத் கெய்க்வாட்டுக்கு நெருக்கமான சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் புஷ்பா கோலியும் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு மாறி அதிர்ச்சி கொடுத்து உள்ளார்.
சுயபரிசோதனை செய்வோம்
முன்னாள் கவுன்சிலர்கள் கட்சி மாறியது குறித்து மும்பை காங்கிரஸ் செயல் தலைவர் சரண்சிங் சப்ரா கூறுகையில், "நீண்ட காலமாக கட்சியில் இருந்தவர்கள், கட்சி மாறியது துரதிருஷ்டவசமானது. எங்கள் சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் பப்பு கானும் கட்சியைவிட்டு சென்று உள்ளார். ஷிண்டே அரசு அவர்களை எப்படி இழுத்தது என நாங்கள் சுயபரிசோதனை செய்வோம்" என்றார். 8 முன்னாள் கவுன்சிலர்கள் இணைந்ததால் தற்போது ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் உள்ள மும்பை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.






