மரத்வாடா மண்டலத்தில் நடப்பு ஆண்டில் 483 விவசாயிகள் தற்கொலை - வருவாய் துறை அதிர்ச்சி தகவல்

மராட்டியத்தில் உள்ள மரத்வாடா மண்டலத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 483 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக வருவாய் துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது
அவுரங்காபாத்,
மராட்டியத்தில் உள்ள மரத்வாடா மண்டலம் வறட்சியால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் மரத்வாடா மண்டலத்தில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூன் 30-ந் தேதி வரை 483 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி தகவலை மாநில வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மண்டலத்தில் ஜனவரி மாதம் 62 பேரும், பிப்ரவரியில் 74 பேரும், மார்ச்சில் 78 பேரும், ஏப்ரலில் 89 பேரும், மே மாதம் 88 பேரும், ஜூன் மாதத்தில் 92 பேரும் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். அதிக பட்சமாக பீட் மாவட்டத்தில் மட்டும் 128 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதேபோல உஸ்மனாபாத்தில் 90 பேர் மற்றும் நாந்தெட்டில் 89 பேரும் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட 483 விவசாயிகளில், 304 பேர் இழப்பீட்டு தொகைக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. 112 பேர் தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. 67 தகுதியற்றவை என கண்டறியப்பட்டது. இருப்பினும் இதுவரை இதில் 10 குடும்பங்கள் மட்டுமே இழப்பீட்டை பெற்றுள்ளன.






