அரசு பள்ளிகளில் புதிதாக 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முடிவு - மந்திரி தீபக் கேசர்கர் பேட்டி

மராட்டிய அரசு பள்ளிகளில் புதியதாக 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மந்திரி தீபக் கேசர்கர் கூறினார்.
புனே,
மராட்டிய அரசு பள்ளிகளில் புதியதாக 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மந்திரி தீபக் கேசர்கர் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
50 ஆயிரம் ஆசிரியர்கள்
மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வு கல்வித்துறையில் புதிய ஆள்சேர்ப்பு நடைமுறைகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் புதிதாக பணி அமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக 30 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். 2-வது கட்டமாக மேலும் 20 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தற்போது தொடங்க உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்படும்.
ஒப்பந்த அடிப்படையில்...
சில பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, புதிய ஆசிரியர்களை பணி அமர்த்தும் வரை ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை நியமித்துள்ளோம். புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டவுடன் அவர்கள் மாவட்ட பஞ்சாயத்து பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள். மாநில அரசு 17 ஆயிரம் தொடக்க நிலைக்கு முந்தைய பள்ளிகளை (பிரி- பிரைமரி) தொடங்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






