மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் அரசு பஸ்-லாரி மோதி 6 பேர் சாவு- மற்றொரு விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி

மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் அரசு பஸ்-லாரி மோதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பயணிகள் காயம் அடைந்தனர். மற்றொரு விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலியானார்கள்.
மும்பை,
மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் அரசு பஸ்-லாரி மோதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பயணிகள் காயம் அடைந்தனர். மற்றொரு விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலியானார்கள்.
பஸ்- லாரி மோதல்
புனேயில் இருந்து புல்தானா மாவட்டம் மகேர் நோக்கி மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. புல்தானா மாவட்டத்தில் உள்ள பழைய மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலை சிந்த்கேத்ராஜா டவுன் அருகே சென்றபோது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது.
லாரியின் பக்கவாட்டில் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் பஸ் டிரைவர் மற்றும் முன் இருக்கைகளில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
6 பேர் பலி
தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி கொண்ட பயணிகளை கேஸ் கட்டர் மூலம் மீட்டனர். இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் 4 பயணிகள் பலியானார்கள். இதேபோல கன்டெய்னர் லாரி டிரைவரும் உயிரிழந்தார்.
மேலும் 10 பயணிகள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே குடும்பத்தில் 5 பேர் சாவு
இதேபோல அமராவதி மாவட்டம் தார்யாபூர்-அஞ்சன்காவ் சாலையில் நேற்று முன்தினம் வேகமாக சென்ற லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலியானார்கள். இதில் 2 குழந்தைகள், ஒரு பெண் அடங்குவர்.
மேலும் 7 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிய போது இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது. விபத்து நடந்ததும் சம்பவ இடத்தில் இருந்து லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
மேற்கண்ட இரு விபத்துகள் குறித்தும் அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






