பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு

கார் விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க லோக் அதாலத் கோர்ட்டு உத்தரவிட்டது.
தானே,
கார் விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க லோக் அதாலத் கோர்ட்டு உத்தரவிட்டது.
கார் விபத்தில் தம்பதி பலி
பால்கர் பகுதியை சேர்ந்தவர் திலீப் தேஷ்முக் (வயது 43). தனியார் நிறுவன அதிகாரியான இவர் கடந்த 2014-ம் ஆண்டு குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டு இருந்தார். அவர்களது கார் மொகதாவில் பவார் பாடா பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது மற்றொரு வாகனம் மோதியது. இதில் திலீப் தேஷ்முக், அவரது மனைவி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவர்களது மகள் மயூரி காயத்துடன் உயிர் தப்பினார். அப்போது மயூரிக்கு 18 வயது. அவரது தம்பி விவேக்கிற்கு 14 வயது. இவர்கள் இருவரும் மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் இழப்பீடு கேட்டு மனு செய்தனர்.
ரூ.64 லட்சம் இழப்பீடு
அதில் தங்களது பெற்றோரின் மரணம் மற்றும் அவர்களது வருமான இழப்பை மேற்கோள் காட்டி தங்களுக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.
இந்த வழக்கு பால்கர் மாவட்ட லோக் அதாலத்தில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பெற்றோரை இழந்த மயூரி, விவேக்கிற்கு 64 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு லோக் அதாலத் நீதிபதி உத்தரவிட்டார்.






