மகாடா குலுக்கலில் கிடைத்த ரூ.7½ கோடி வீடு; பணமில்லாமல் திரும்ப ஒப்படைத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.


மகாடா குலுக்கலில் கிடைத்த ரூ.7½ கோடி வீடு; பணமில்லாமல் திரும்ப ஒப்படைத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 27 Aug 2023 1:00 AM IST (Updated: 27 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மகாடா குலுக்கலில் கிடைத்த ரூ.7½ கோடி வீட்டை வாங்க பணமில்லாமல் பா.ஜனதா எம்.எல்.ஏ. திரும்ப ஒப்படைத்து உள்ளார்.

மும்பை,

மகாடா குலுக்கலில் கிடைத்த ரூ.7½ கோடி வீட்டை வாங்க பணமில்லாமல் பா.ஜனதா எம்.எல்.ஏ. திரும்ப ஒப்படைத்து உள்ளார்.

ரூ.7½ கோடி வீடு

மும்பையில் மாநில அரசின் மகாடா ஆணையம் வீடுகளை கட்டி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. சந்தையை விட மகாடாவீடுகள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் மக்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். மகாடா வீடுகள் வாங்க பொது மக்கள் குறிப்பிட்ட தொகையை கட்டி விண்ணப்பிக்க வேண்டும். குலுக்கலில் வீடு கிடைத்தவர்கள் பின்னர் வீட்டுக்கான மொத்த தொகையையும் கட்ட வேண்டும். வீடு கிடைக்காதவர்கள் செலுத்திய முன்பணம் அவர்களுக்கு திரும்பி அளிக்கப்படும். சமீபத்தில் மும்பை மகாடா குலுக்கல் நடந்தது. இதில் அதிக வருமானம் உள்ளவர்களுக்கான பிரிவில் விற்பனை செய்யப்பட்ட ரூ.7 கோடியே 57 லட்சம் 94 ஆயிரத்து 268 மதிப்பிலான வீடு ஜால்னா பத்னாபூர் பா.ஜனதா எம்.எல்.ஏ. நாராயண் குகேக்கு கிடைத்தது. தார்டுதேவ் கிரிசன்ட் அடுக்குமாடி கட்டிடத்தில் 1,531 சதுர அடி அளவுள்ள அந்த வீட்டை வாங்க பா.ஜனதாவை சேர்ந்த மத்திய மந்திரி பாகவத் காரட், நாராயண் குகே எம்.பி., எம்.எல்.ஏ. ஒதுக்கீட்டில் விண்ணப்பித்து இருந்தனர். இதில் நாராயண் குகேக்கு குலுக்கலில் வீடு கிடைத்தது.

திரும்ப ஒப்படைப்பு

இந்தநிலையில் குலுக்கலில் கிடைத்த வீட்டை வாங்க பணம் இல்லாததால் நாராயண் குகே அந்த வீட்டை திரும்ப ஒப்படைத்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், " மகாடாவில் கிடைத்த வீடுக்கு 90 சதவீதம் வீட்டுகடன் கிடைக்கும் என நினைத்து இருந்தேன். ஆனால் அதிகபட்சம் ரூ.5 கோடி தான் தர முடியம் என வங்கிகள் கூறிவிட்டன. பாக்கி உள்ள தொகையை முதல் தவணையாக (டவுன் பேமேன்ட்) கொடுக்க என்னிடம் பணமில்லை. எனவே எனக்கு கிடைத்த வீட்டை திரும்ப ஒப்படைக்க உள்ளேன். " என்றார். பா.ஜனதா எம்.எல்.ஏ வீட்டை திரும்ப ஒப்படைத்ததை அடுத்து ரூ.7½ கோடி மகாடா வீடு அதை கேட்டு விண்ணப்பித்து இருந்த மந்திரி பாகவத் காரட்டுக்கு வழங்கப்படும். அவரும் வேண்டாம் என கூறிவிட்டால் பொதுப்பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும்.

1 More update

Next Story