நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 7 நோயாளிகள் பலியான பரிதாபம்; உரிய விசாரணை நடத்த கார்கே வலியுறுத்தல்
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் 4 குழந்தைகள் உள்பட மேலும் 7 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் 4 குழந்தைகள் உள்பட மேலும் 7 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.
மேலும் 7 பேர் பலி
நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக பிறந்த 12 பச்சிளம் குழந்தைகள் உள்பட 24 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 24 நோயாளிகள் உயிரிழந்த நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று ஆஸ்பத்திரியில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் குழந்தைகள் ஆவர். இதன் மூலம் நாந்தெட் ஆஸ்பத்திரியில் 2 நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து உள்ளது.
டீன் விளக்கம்
அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் உயிரிழந்த 24 பேரில் 12 பேர் பச்சிளம் குழந்தைகள் எனவும், 8 பேர் 70-80 வயதான முதியவர்கள் எனவும் நாந்தெட் அரசு மருத்துவ கல்லூரி டீன் ஷியாம் ராவ் வாகோடே கூறியுள்ளார். உயிரிழந்தவர்கள் சர்க்கரை நோய், சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளர்கள் அல்லது மருந்து பற்றாக்குறை எதுவும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்படும் என மருத்துவ கல்வித்துறை மந்திரி ஹசன் முஷ்ரிப் தெரிவித்து உள்ளார்.
கார்கே கேள்வி
இந்தநிலையில் 2 நாட்களில் 31 நோயாளிகள் நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த சம்பவம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர். இதில் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மருத்துவர்கள் பற்றாக்குறை, சரியான சிகிச்சை இல்லாததால் நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 31-ந் தேதி இதே போன்ற சம்பவம் தானே மாநகராட்சி ஆஸ்பத்திரியிலும் நடந்தது. அங்கு ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் நடப்பதால் மாநில அரசின் சுகாதார கட்டமைப்பு கேள்விக்குறி ஆகிறது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராகுல்காந்தி வேதனை
விளம்பரத்துக்காக பல கோடி ரூபாய் செலவிடப்படும் போது குழந்தைகளின் சிகிச்சைக்காக செலவிட இந்த அரசிடம் பணமில்லையா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பா.ஜனதா அரசை விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பா.ஜனதா அரசு விளம்பரத்துக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்கிறது. ஆனால் குழந்தைகளுக்கு மருந்து வாங்க உங்களிடம் பணம் இல்லையா?. பா.ஜனதாவின் கண்களுக்கு ஏழை மக்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை" என வேதனை தெரிவித்து உள்ளார். இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பிரியங்கா காந்தி ஆகியோரும் இந்த சம்பவத்தில் மராட்டிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.