இந்தி பாடகர் சோனுநிகமின் தந்தை வீட்டில் ரூ.72 லட்சம் கொள்ளை

மும்பை,
மும்பை ஓஷிவாராவை சேர்ந்தவர் இந்தி திரைப்பட பாடகர் சோனு நிகம். இவரது தந்தை அகம்குமார் நிகம். இவர் அங்குள்ள வின்ட்சர் கிராண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 19-ந்தேதி இவர் தனது சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய போது லாக்கரில் வைத்திருந்த ரூ.40 லட்சம் மாயமாகி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி தனது மகளிடம் விசாரித்த போது காணாமல் போன பணம் குறித்து தகவல் கிடைக்கவில்லை. மறுநாளான 20-ந்தேதி சாத் பங்களாவில் உள்ள பாடகர் சோனுநிகம் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது லாக்கரில் இருந்த மேலும் ரூ.32 லட்சம் காணாமல் போய் இருந்தது. ஆக ெமாத்தம் ரூ.72 லட்சம் திருடப்பட்டதால் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகம்குமார் நிகமிடம் கார் டிரைவராக வேலை பார்த்த ரேகான் என்பவர் தான் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில், கள்ளச்சாவி மூலம் லாக்கரை திறந்து பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.






