வீடு தருவதாக கூறி 74 பேரிடம் ரூ.1 கோடியே 70 லட்சம் மோசடி

குறைந்த விலைக்கு வீடு தருவதாக கூறி 74 பேரிடம் ரூ.1 கோடியே 70 லட்சம் மோசடி செய்த கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடிவருகிறார்கள்.
மும்பை,
குறைந்த விலைக்கு வீடு தருவதாக கூறி 74 பேரிடம் ரூ.1 கோடியே 70 லட்சம் மோசடி செய்த கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடிவருகிறார்கள்.
ஆன்லைனில் விளம்பரம்
மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைனில் குறைந்த விலைக்கு வீடு விற்பனைக்கு இருப்பதாக அளிக்கப்பட்டு இருந்த விளம்பரத்தை கண்டார். அதில், இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தார். இதன் பின்னர் தோபிதலாவ் பகுதியில் ஏஜென்சி நடத்தி வந்த பர்வேஸ் சேக் (வயது31) மற்றும் ஜோயா சையத் (32) ஆகிய 2 பேர் ராஜேசை தொடர்பு கொண்டு பேசினர். முல்லுண்டில் உள்ள வீடு ஒன்று வங்கியால் ஜப்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த வீடு ஏலம் விடப்பட்டு ரூ.63 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு விருப்பம் தெரிவித்த ராஜேஷிடம் சேவை கட்டணம், பெயர் மாற்றம் உள்பட பல வேலைகளுக்கு ரூ.7 லட்சம் தர வேண்டும் என தெரிவித்தனர்.
இதற்கு அவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பணத்தை செலுத்தினார். ஆனால் வீடு அவரது பெயருக்கு மாற வில்லை.
ஒருவர் கைது
இதற்கிடையில் தோபிதலாவ் பகுதியில் அலுவலகம் நடத்தி வந்த பர்வேஸ் சேக் தலைமறைவாகி விட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த ராஜேஷ் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பர்வேஸ் சேக் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 74 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சம் வரையில் இதே பாணியில் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இந்த கும்பலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவீந்திர பாட்டீல் (வயது52) என்பவர் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் மற்ற நபர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






